Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Saturday, May 30, 2009

542. ஒரு ஈழத்தமிழரின் மடல் - அயலகத் தமிழ்ச் சகோதரர்களுக்கு!

மின்மடலில் இந்தக் கட்டுரை வந்தது. மாற்றுக் கருத்தாக, சற்று வித்தியாசமாகத் தோன்றியதால், நண்பர்கள் பார்வைக்கு வைக்கிறேன். நன்றி.

எ.அ.பாலா
*****************************

அயலகத் தமிழ்ச் சகோதரர்களுக்கு!

ஐயன்மீர்! ஈழத்திலுள்ள உங்கள் சகோதரத் தமிழர்களுக்காக நீங்கள் துடிக்கும் துடிப்பும், வெறும் இனஅபிமானத்தால் குறுகியிராத உங்கள் இதயம் மானுட அவலம் கண்டே விம்மிக் கண்ணீர் உகுப்பதைக் காட்ட உங்களுக்குள் நடக்கும் போட்டா போட்டியும் கண்டு நெகிழ்கிறேன். நான் குறிப்பிடுவது அரசியல்வாதிகளை அல்ல. கவிதை எழுதியும், கட்டுரைகளில் இனவுணர்வாய்க் கரைந்துருகியும், களச்செயற்பாட்டின் தேவையுணர்ந்து ஒன்றுகூடிப் பொங்கியும் கவலையை வெளியிட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களைச் சொல்கிறேன். இந்த நாட்டில் தமிழ்மக்கள் மீண்டும் ஒரு பேரழிவுக்குச் சென்றுவிடாதிருக்க நீங்களும்தான் எங்கள் நம்பிக்கை. போரில் வெல்வதை விட போரைத் தவிர்ப்பதே மானுட அவலத்தை நிறுத்தும் வழி என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை.

உங்கள் சகோதரத் தமிழர்கள் படும் கஷ்டங்கள் குறித்து நீங்கள் பரிதவிப்பதும், துயரின் எல்லையில் எதிரிகளைப் பஸ்மமாக்கிவிட முடியாதா என்று ஆவேசமுறுவதும், வரலாற்றின் தொடர் குரூரம் குறித்து வருந்துவதும், ஈழச் சகோதரர்களுக்கு ஏதாவது செய்யமுடியாதா என்று ஏங்குவதும், தன்னுயிரை மாய்த்து தமிழர்களுக்கு உணர்வூட்டுபவரை எதிர்த்து மறுக்காது, ஊக்குவிக்கும் நிர்ப்பந்தமுமாக.... உங்கள் அறவுணர்வை, மனிதாபிமான நெகிழிதயத்தை எல்லோரும் அறிந்து கொள்ளும்படியாகவே நடந்து வருகிறீர்கள். உலகத் தமிழரின் பாராட்டும் வந்து குவிந்தபடி! (தமிழ்நாட்டு அகதிமுகாம்களில் நானும் சில வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். ஈழச்சகோதரர்கள் மீதான உங்கள் அன்பாவேசத்தையும், துயர்துடைக்கும் துடிப்பையும் அனுபவிக்கக் கிடைத்ததில்லை என்பது என் கூடுதல் எதிர்பார்ப்பால் நேர்ந்த குறையாக இருக்கலாம். தவிர, கொத்துக் கொத்தாக மக்களைப் படுகொலையாக்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து நான் தப்பி வேறு வந்துவிட்டேன்.)

இருந்தாலும், ஆறு கோடிச் சகோதரர்களின் தமிழ்ப்பாசக் கொந்தளிப்பு எனக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு ‘கெத்’தை ஏற்படுத்துவதாகவே இன்னும் இருக்கிறது. மீண்டும் ஆயுதங்களைத் தூக்கி, இன்னமும் அந்தப் புறநானூற்றுத் தமிழ்வீரம் ஈழத்தில்தான் இருக்கிறது என்ற புளகாங்கிதத்தை அடையவும் - உலகத் தமிழருக்கு வழங்கவும் மனம் பொங்குகிறதுதான். ஈழத்தமிழன் பொருட்படுத்தப்படுவது இந்த வீரத்திற்கும் அதனால் விளையும் அழிவுக்குமாகத்தான் என்று உணர்த்தியே வந்திருக்கிறீர்கள். நாம் இதை எப்படி விட? சிங்களவரோடு சமாதானமாக இந்தத் தீவில் சேர்ந்து வாழ்வது பற்றி யோசிக்கலாம் எனும்போதே, ‘இவன் ரத்தக்காட்டேரிகளின் அடிவருடும் துரோகிகளில் ஒருவனாக இருப்பான் போலிருக்கிறதே’ என்ற எண்ணம் உங்களுக்குள் ஓடுகிறதல்லவா? சண்டையின்றி வாழ்தல் பற்றிய உரையாடலை உங்களிடம் திறக்கவே முடியவில்லை.

முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து மாபெரும் இடப்பெயர்வாக வன்னிக்கும், பின்னர் உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவு நந்திக்கடல் களப்பு வரைக்கும் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்மக்கள் அடைந்த கதி யாருக்குத்தான் துயரம் தராமலிருக்க முடியும்? புலிகளின் பாதுகாப்புக்காக இறுதியில் அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் இருக்கலாம். அதேசமயம் வன்னிக்கு வெளியே இலங்கைக்குள் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்திருந்தார்களே.... அவர்களுடன் இந்த மக்களைப் போய்ச் சேர விடாமல், அதற்காக ஒரு வரி பேசாமல் ஏன் ஒரேயடியாய்த் தமிழ்வீரச் சாகடிப்புக்குத் துடித்தீர்கள்?

சிறிது சிறிதாய் வவுனியா முகாம்களுக்கு வந்துசேர்ந்த மக்களை நெருப்புக்குள் போய் விழுந்துவிட்டவர்களாய்க் கதைகள் கட்டி, அச்சுறுத்தி புலிகளுடன் வன்னிக்குள் வைத்து அழித்து முடிப்பதற்கே பொங்கினீர்களே ஏன்? வன்னிக்கு வெளியே இருந்த தமிழ்பேசும் மக்கள் என்ன கருதியிருந்தார்கள் என்பதை அறிய முனைந்தீர்களா? அல்லது வவுனியா முகாம்களுக்கு வந்து சேர்ந்துகொண்டிருந்த மக்கள் கருதுவதை அறியவாவது முயற்சி செய்தீர்களா?

புலிகளிடம் நம்பிக்கை வைக்க முடியாதவர்கள் - விமர்சனமுள்ளவர்கள் எல்லோரும் துரோகிகள் என்ற சுலபமான முடிவுக்கு வர உங்களைத் தூண்டியது எது? புலியல்லாத தமிழர், முஸ்லிம்களை விடுங்கள். பெரும்பான்மைச் சிங்களவர் ராட்சசர்கள்தான், அவர்களுடன் பேச்சு சாத்தியமில்லை ‘அடி’தான் என்ற உங்கள் தொடர்ஊக்குவிப்புக்கான மானுடப்புரிதல் ஆய்வுமுறை என்ன? கடலுக்கு அப்பால் நடக்கும் வன்முறைகளின் வாதை, ஹீரோவின் வெற்றிக்காக ஆவலுற்றபடி திரைப்படமொன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் கிளர்ச்சியைத் தந்ததா?

இலங்கையில் தமிழர்களை விடச் சிறுபான்மை இனமாகத் தங்களைக் கருதும் முஸ்லிம்களை வசதியாக மறந்தபடியும், அவர்களது இருப்பை மறுத்தபடியும், ஜனநாயகத் தமிழ்க் குரல்களை அறுத்தபடியும் வன்முறைப் பாசிசப் போராட்டத்திற்கு உரமூட்டும் விதமாக நீங்கள் வடித்த கண்ணீரை மனுக்குலம் மீதான அக்கறையாகச் சொன்னதுதான் அதிர்ச்சியூட்டியது!

அதைவிடுவோம். உங்கள் சொந்த இனத்தின் மீது மட்டுமே அக்கறை கொண்டு அவர்கள் அவலங்களுக்காக வருந்துகிறீர்கள் என்று பார்த்தாலும், உங்கள் நாட்டு அரசை ஒரு இம்மியளவும் உங்களால் அசைக்க முடியாது என்பது உள்ளிட்ட குவலயமாச் சூழ்நிலையை நன்கறிந்த நீங்கள், முட்டாள்ச் சண்டியர்களாய்க் காட்டிக்கொண்டுவிட்ட புலிகளுக்குச் சொல்லியிருக்க வேண்டிய ஆலோசனை என்ன? சரி, அவர்களிடம் யாரும் பேசமுடியாது என்பது தெரிந்தால், மக்களைக் காப்பாற்றப் பேசியிருக்க வேண்டியது என்ன? ‘அந்தக் காலம்’ போல் இறுமாப்பாய் அழிந்து முடிவது தவிர வேறு புத்திசாதுரியமே தமிழனுக்கு வராதா? நீங்கள் கடைசிநேரம் இயலாமையைச் சொல்லி அழுததுதான் முழுக்க முழுக்க உண்மையா?

தனிநாடு சாத்தியமில்லை என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா? அறிந்தும் புலிகளுக்கு உசாரேற்றியே வந்தீர்களே ஏன்? சிங்களவர், முஸ்லிம்கள், மலையகத் தோட்டக்காட்டாரையெல்லாம் வேலைக்காரர்களாகவே வைத்திருந்த உயர்குடித் தமிழர்களும், உலகப்புலித் தமிழர்களுமாய்ச் சேர்ந்து, அப்பாவி மக்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்துச் சிங்களவனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்ற வீம்புக்காகவல்லவா ஒத்துத் தாளம் போட்டீர்கள்!

ராட்சசர்களிடம் சிக்கி அழிந்துகொண்டிருக்கும் அப்பாவித் தமிழர் என்ற சித்திரம் உங்கள் மனிதாபிமான முகத்தை முன்நீட்டிக் கொண்டிருப்பதற்கு உதவியதால், வேறு எதையும் காதில் போட்டுக் கொள்ளாமலும் கண்டுகொள்ள விரும்பாமலும் நீங்கள் துடித்த துடிப்பில் நேர்ந்த அழிவு பற்றி இப்போதாவது நீங்கள் சிந்தித்துணரக் கூடுமா? அல்லது மீண்டும் அனுதாப உசாரேற்றியே அழித்து முடிக்கத் திருவுளமா?

ஈழத்தில் இப்போது மிஞ்சியிருக்கும் நொந்த தமிழ்மக்களை நீங்கள் இப்போதே மெல்ல மெல்ல மறக்க ஆரம்பித்திருப்பீர்கள். இவர்களுக்குப் புது வாழ்வளிப்பதற்கும் போர் ரணங்களை ஆற்றுவதற்கும் நீங்கள் ஆர்த்தெழ மாட்டீர்கள்; டெல்லி வரை போய்க் கொடும்பாவி எரித்துக் குரலெழுப்ப மாட்டீர்கள். உங்கள் ஆவேசமெல்லாம் புலிப்போரினால் தமிழ்ப்பெருமையை நிலைநாட்டுவதில் இருந்ததே தவிர, தமிழ்மக்களைக் காப்பாற்றுவதில் இருக்கவில்லை.

உங்களது தனிநாட்டுக் கனவுக்குப் பரிசோதனைப் பிராணிகளாய் அழியத் தயாராயிருக்கும் ஈழத்தமிழர்களே உங்களுக்குத் தேவை. நொந்தது போதும் இனி பகையையும் வெறுப்பையும் வீணே வளர்க்காமல் மற்றவர்களைச் சகித்து வாழ்வதைப் பார்க்கலாம் எனும் மக்கள் உங்களுக்கு எந்த உபயோகமுமற்றவர்கள். புலிகளுடன் நின்ற மக்களே ஈழத்தமிழர்களாகவும், அவர்களது பிடிக்குள்ளிருந்து தப்பி இலங்கையில் விரவியிருந்த தமிழர்கள் துரோகத் தமிழர்களாகவும் உங்கள் கருத்தில் இருந்ததை நீங்கள் காண்பித்தே வந்திருக்கிறீர்கள். கடைசிநேரம் ‘உங்களோடு முட்டாள்த்தனமாகச் சாகவிரும்பவில்லை’ என்று தப்பி வந்து படையினரிடம் சரணடைந்த தயா மாஸ்டரும் ஜோர்ஜூம் மற்றும் ஏராளம் புலி உறுப்பினர்களும் மக்களும் கடற்புலித்தளபதி சூசையின் மனைவியும் பிள்ளைகளும் ‘காட்டிக்கொடுத்த’ துரோகிகள் என்றுதான் இன்னுங்கூட உங்களால் தமிழ்மானக் கதை பேச முடிகிறது.

ராணுவம், சட்டங்கள், பெரும்பான்மை அதிகாரம் எல்லாவற்றையும் வைத்திருக்கும் எந்தவொரு அரசாங்கத்தையும் அது தர்ம ஆட்சி நடத்துகிறது என்று சொல்வதிலோ, அதன் செயல்களைக் காபந்து பண்ணிப் பேச முற்படுவதிலோ நீதிநியாயம் சிறிதுமிருக்காது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். ஆனால் அதனோடு போரிட்டு அழியும்படி மக்களை உசாரேற்றுபவர்களுக்கு, அதன் சாதகபாதகங்களை அலசிப் பார்க்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். வெற்று உணர்ச்சியாவேசங்களைத் தாண்டிய சிந்தனையும் கள ஆய்வும் இருக்க வேண்டும். ரோசம், வீரம், இனப்பெருமை என்ற உணர்ச்சிகரப் பொங்குகைகளைத் தூண்டி விடும்போது, அதனால் நேரும் மக்கள் அழிவுப் பேரவலத்திற்கும் பதில் சொல்லியாக வேண்டும். அதற்கான பழி முழுவதையும் எதிரிமீது சுமத்தி, மனிதாபிமானக் கண்ணீர் ஓலமிட்டே நம் தரப்புப் போரைத் தீவிரப்படுத்தி விடுவது மக்களைப் பாதுகாக்கும் நடைமுறை அல்ல. மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் காண்பிக்க வேண்டியது அறிவார்ந்த பொறுப்புணர்வே தவிர, கும்பலோடு சேர்ந்து உணர்ச்சிவசப்பட்டுப் போடும் கூப்பாடு அல்ல.

போதும்... சகோதரர்களே போதும்! இப்போதும் உங்கள் வீரமரபுப் பெருமித ஆவேசங்களையும் மாற்று இனவெறுப்புக் கக்கல்களையும் எமக்கு ஆதரவாக என்று சொல்லிப் பொங்கிக் கொண்டிருக்க வேண்டாம். நேற்றுவரை தொடர்ந்திருந்த, தன் வாளால் தலை துணித்துப் பலி கொடுத்துப் படை நடத்தும் ‘பொற்கால மிச்சம்’ முடிந்ததுக்குப் பிறகு, இங்கே கொலைகள் இல்லை, வேட்டுக்கள் இல்லை, அழிவோலங்கள் இல்லை. இது தற்காலிகமானதுதான் தமிழர்களே என்று புது வியாக்கியானத்தோடு வந்துவிடாதீர்கள். நிறைய இழந்துவிட்டோம். நிறைய களைத்துவிட்டோம். எதிரிகளைத் தொடர்ந்து கட்டமைத்து ஏசியபடியே நம் இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. சகிப்பும், பிறரோடு சேர்ந்து வாழும் புரிதலும், நம் வீம்புகளை விடுதலுமே நம்மை வாழவைக்கும். அதற்கு வேண்டியதைப் பேசுங்கள். அதற்கான முயற்சிகளில் உங்களால் ஏதேனும் செய்ய முடிந்தது இருப்பின் அதற்கு முயலுங்கள்.

தமிழகத்தின் முதல்வரும் அவரது கட்சியினருமே மத்திய அரசாங்கம் அமைவதில் பெரும்பங்காற்றியதாகப் புகழப்படும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா பாருங்கள். அமைச்சுப் பதவிகள் கேட்டு டெல்லி செல்லும் முதல்வரிடம், முகாம்களே வாழும் ஊர்களாகி விட்ட ஈழமக்களுக்கும் இந்தியா செய்யக்கூடிய உதவிகள் பற்றிய ஆலோசனைகளை ஞாபகப்படுத்த முடியுமா பாருங்கள். மத்திய அரசின் தூதுவர்கள் இங்கு வந்து நிலைமைகளைப் பார்த்து நிதியுதவி அறிவித்துச் செல்கிறார்கள். அவர்களோடு தமிழக முதல்வரும் கட்சியினரும் முடிந்தளவில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வறிஞர்கள் என்று நீங்களும் இங்கே வந்து அகதிமுகாம்களிலுள்ள உங்கள் சகோதரர்களைப் பார்க்க மனம் கொள்ளுங்கள். நிலைமையை நேரில் வந்து காணுங்கள். தமிழக முதல்வரூடாக மத்திய அரசை அணுகி இச்சமயத்தில் இதற்கு முயன்றால் உங்களை யாரும் தடுக்கப் போவதில்லை. ஏற்கனவே தமிழக முதல்வருக்கும் செல்வி ஜெயலலிதாவுக்கும் இங்கிருந்து அரசபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் அமைதிவாழ்வில் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை உதவிகளாக்க இது சந்தர்ப்பம். வாருங்கள்.

தமிழ்த்தீவிரவாதத் தடையற்ற இப்போது, இங்கு மக்களுக்குச் செய்யக்கூடிய உதவிகளைச் செய்வதற்கான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லுங்கள். முடிந்தால் அதற்காகவும் ஒருமுறை டெல்லி சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா பாருங்கள். இந்திய அரசின் உதவிகளை அறிவுறுத்தல்களை இலங்கை அரசு மறுக்கப் போவதில்லை. ஈழத்தமிழர்கள் மீண்டும் போரிட்டு அழிவுகளுக்குச் செல்லாமலிருப்பதற்கான அதிகாரப்பகிர்வை வலியுறுத்துங்கள். மத்திய அமைச்சரவையில் பொறுப்புகள் பெற்றுக்கொள்ள தன் கூட்டணி வலுவை பிரயோகிக்க முடிந்த தமிழக முதல்வருக்கு இதற்காகவும் மத்திய அரசை வற்புறுத்தும் வலு இப்போதிருக்கிறது. அதற்கு ஆகுமானதைச் செய்யுங்கள். உங்களிடமுள்ள ஈழத்தமிழ் ஆதரவுப் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி எங்களுக்கு அமைதியான வாழ்வளிக்க உதவுங்கள். ‘சிங்களவன் தமிழருக்கு ஒண்ணுந் தரமாட்டான்’ என்று முனகிவிட்டு உங்கள் அலுவல்களைக் கவனிக்கப் போய்விடாதீர்கள்.

ஈழத்தமிழர்கள் மீது உங்களுக்கிருக்கும் அக்கறை அரசியல்வாதிகளினுடையதைப் போல வெறும் ஓட்டு அக்கறையல்ல என்பதை நானறிவேன். அவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தால்தான் உங்கள் அனுதாபம் பொங்கும் என்பதல்ல உண்மை. அவர்கள் இனிமேலும் அழிவுகளுக்குச் செல்லாமல் அவர்களும் உங்களைப் போன்றதொரு இயல்புவாழ்க்கைக்குத் திரும்புவதற்காகவும் நீங்கள் ஆவேசமுடன் செயற்படுவீர்கள் என்றே நம்புகிறேன். உங்களது அக்கறையும் அனுதாபமும் ஈழத்தமிழர்களுக்குப் போரற்ற அமைதி வாழ்வை ஸ்திரப்படுத்தித் தருவதிலும் தொடர்ந்திருக்கும் என்பதே என் நம்பிக்கை.

போதும், வன்முறையால் வன்முறையை வரவழைத்து அழிந்தது போதும். வன்முறையற்ற வழியில் எங்கள் உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கு வேண்டிய பின்பல நம்பிக்கையை எங்களுக்குத் தாருங்கள். ராட்சசர்களோடு தமிழ்மக்கள் வாழமுடியாது என்று வீர உசுப்பேற்றி எங்களை மேலும் அழித்துவிடாதீர்கள் சகோதரர்களே!

தமிழகமே! தமிழகமே! ஈழத்தமிழர்களை என்ன செய்யக் கருதி இருக்கிறாய்?

Sunday, April 26, 2009

541. ஈழப்பிரச்சினையும் இந்தியத் தேர்தலும்

பெரிய அலசல் எதுவும் கிடையாது. சில எண்ணங்கள்:

1. ஈழத்தமிழர் பிரச்சினையை இந்தியாவில் உள்ள பிற மாநிலத்தவருக்கு சரியாக எடுத்துச் செல்லவில்லை என்ற கருத்துக்கு: எடுத்துச் சென்றிருந்தாலும் பெரிய அளவில் பலன் இருந்திருக்காது என்பது தான் யதார்த்தம். இதற்கு பிற மாநிலத்தவர் தமிழர்களை வெறுக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இந்தியத்தமிழர்கள் பிற நாடுகளில் மாட்டிக்கொண்டு அல்லல்படுவதற்கே, தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் கவனம் ஈர்க்கப்படாத நிலையில், வேற்று நாட்டவரான ஈழத்தமிழருக்கு அவர்களிடம் எந்த விதமான அக்கறையை எதிர்பார்க்க முடியும் ?

2. மேற்கூறியதற்கு, இந்திய ஆங்கில மீடியாவின் பொறுப்பற்றத்தனமும் ஒரு முக்கியக் காரணம். ஈழத்தமிழர் படும் இன்னல்கள், அங்கு ஏற்படும் பெரும் உயிரிழப்பு குறித்து எதுவும் பேசாமல், இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த இடத்தைக் கைப்பற்றியது / அந்த இடத்தை கைப்பற்றியது என்று கிரிக்கெட் மேட்ச் வர்ணனையைத் தான் நெடுங்காலமாக செய்து வருகிறது :-( அங்கு நிலவும் மனித அவலம் குறித்த கண்ணோட்டம் இந்திய மீடியாவில் செய்திகளாகவோ, விவாதங்களாகவோ வரவில்லை!

3. எந்த தமிழக அரசியல் கட்சியும், உருப்படியாக ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பது ஒரு புறமிருக்க, மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, இப்பிரச்சினையில் பெரும் நாடகம் ஆடியிருக்கிறது என்பதில் பெரும்பான்மையான தமிழர்களுக்கு உடன்பாடு இருக்கிறது. அதனால், காங்கிரஸ்-திமுக கூட்டணி இத்தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவும் / தழுவ வேண்டும்.

அந்த ஒரு காரணத்திற்காக, அதாவது வாக்குகள் சிதறாமல் இருக்க தனித்துப் போட்டியிடும் எந்தக் கட்சிக்கும் (பிஜேபி, தேமுதிக..) அல்லது சுயேச்சைகளுக்கும் (சரத்பாபுவும் சேர்த்து) இம்முறை வாக்களிக்காமல் இருப்பது நல்ல யுக்தியாக அமைய வாய்ப்புள்ளது. "தனி ஈழம் தான் தீர்வு" என்று தற்போது ஜெ முழங்குவது ஆச்சரியத்தை (ஏன் அதிர்ச்சியையும்!) தந்தாலும், அதிமுக கூட்டணிக்கே ஆதரவு அளிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகவே தோன்றுகிறது! மத்தியில் அரசு மாறினால், ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பித் தான் ஆக வேண்டும்!

4. இந்தியாவின் அறிவுஜீவி செக்யூலரிஸ்ட்களும், லிபரல்களும் வெகு தூரத்தில் நடக்கும் பாலஸ்தீனிய, இராக் பிரச்சினைகளுக்கு இங்கு ஓங்கி குரலெழுப்பி பெரிய அளவில் கலாட்டா செய்வார்கள். மீடியாவும் அவர்களுக்கு நல்ல விளம்பரம் அளிக்கும் ! இஸ்ரேல் தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் (நியாயமானது தான்!) தெரிவிக்கும் இவர்கள், நம் அண்டையில் நடக்கும் (இலங்கை ராணுவத் தாக்குதலால் ஏற்படும்) அநியாயப் படுகொலை (இன ஒழிப்பு!) பற்றி வாய் திறக்க மாட்டார்கள் :-( ஹெஸ்பொல்லா ஒரு தீவிரவாத இயக்கம் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!!!

5. விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று கூறுபவர்களுக்கு: சரி, போரின் இறுதிக் கட்டத்தில் அப்படி நடக்கிறது என்பதை ஓரளவு ஒப்புக் கொள்ளலாம்.

ஆனால், கடந்த ஒரு வருடமாக, போர் என்ற பெயரில், இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்ததற்கு (state terrorism) உலக நாடுகள் தரப்பிலிருந்து முனகலான கண்டனம் தான் கேட்டுக் கொண்டிருந்தது! (அதுவும், சீனாவும், பாகிஸ்தானும், இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்று உளறி வருகின்றன!)

இப்போது தான், உலகெங்கும் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் சற்று உரக்க குரல் கொடுத்துள்ளன! ஆனால், ராஜபக்ஷே யார் பேச்சையும் இந்த நிமிடம் வரை கேட்கவில்லை என்பது நாம் அறிந்தது தான்...

எ.அ.பாலா

டெயில்பீஸ்: போர் நிறுத்தத்திற்கான மற்றும் பேச்சு வார்த்தைக்கான அமெரிக்க வேண்டுகோளை நிராகரித்து, நேற்று கோத்தபயா ராஜபக்ஷே "எங்களுக்கு எது சரி என்று எடுத்துச் சொல்ல நீங்கள் யார்?" என்று மிகவும் ஆணவமாக பேசியிருப்பது (இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி) குறிப்பிடத்தக்கது.

"The US state department should be ashamed of their request. If anybody tells me that, I will tell them to mind their own business. This is completely an internal issue..... We will not allow anyone to interfere"

இனிமேல் பேசி, வேண்டுகோள் விடுத்து, இலங்கைக்கு யாரும் எதையும் புரிய வைக்க முடியாது என்பது தெளிவு! மற்றவர்களை அண்டிப் பிழைக்கும் நிலையில் இருக்கும் ஒரு சுண்டைக்காய் நாட்டுக்கு இத்தனை திமிர் இருப்பதற்கு சீனக் கம்யூனிஸ்ட்களும் ஒரு முக்கியக் காரணம்.

அப்படியே கீழுள்ள வாக்குப்பெட்டியில் தயவு செய்து வாக்களித்து விட்டுச் செல்லவும்:


ஜெயலலிதாவின் தனி ஈழ ஆதரவு
ஆத்மார்த்தமான திடமான முடிவு
தேர்தல் ஸ்டண்ட்
பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்







Thursday, April 02, 2009

536. சுகுணா திவாகருக்கு ஒரு இலவச விளம்பரம்!

சமீபத்தில் சுகுணா திவாகர் எழுதிய இடுகையின் சுட்டியை டோண்டு ராகவன் எனது இந்தப் பதிவில் பின்னூட்டத்தில் இட்டுச் சென்றிருந்தார். அதை வாசித்தபோது தான் தெரிந்தது, சுகுணா திவாகர் எனக்கு "திடீர் ஈழ ஆதரவாளர்" பட்டம் வழங்கியிருப்பது! சுகுணா போன்ற ஜனநாயகவாதிகளுக்கு விளக்கம் அளிப்பது என் கடமையாகிறது :)

சுகுணா திவாகர் எழுதியது:

ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஜனநாயகச்சக்திகளின் மீது அவதூறுகளைப் பரப்பும் கும்பல்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம். அருந்ததிராய் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்கிற ரேஞ்சில் என்றென்றும் அன்புடன் பாலா எழுதுவது அதற்கு ஒரு உதாரணம். அருந்ததிராய் முன்வைத்துப் போராடிய எத்தனை மக்கள் பிரச்சினைகளை பாலா ஆதரித்திருக்கிறார்? சனாதனப் பார்வையையே தன் எழுத்துக்களின் அடிப்படையாய்க் கொன்டுள்ள பாலா போன்றவர்கள், அருந்ததிராய் பப்ளிசிட்டிக்காக மட்டுமே பேசுவார் என்று அருந்ததிராயின் வகிபாத்திரத்தை ஊத்தி மூடப்பார்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இதேபோலவே புலிகளின் மீதான விமர்சனத்தோடேயே ஈழமக்களின் பிரச்சினைகளைப் பேசும் சுகன், ஷோபாசக்தி, .மார்க்ஸ், ரயாகரன் என மாற்றுக்குரலை முன்வைக்கும் அனைவரையும் ரா ஆட்கள், கருணா ஆதரவாளர்கள், இலங்கை அரசை மறைமுகமாக ஆதரிப்பவர்கள் என்றெல்லாம் அவதூறு பரப்புவது, அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் நியாயங்களைக் கூட பரிசீலிக்க மூர்க்கமாய் மறுப்பது ஆகியவை இன்று இணையத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் ஈழப்பிரச்சினையை அரசியல் ஆதாயமாக மாற்றி அதற்குத் துரோகம் செய்துள்ள நெடுமாறன் உள்ளிட்ட கருங்காலிகளை விமர்சிப்பதை விட மேற்கண்ட ஜனநாயகச் சக்திகளைக் காய்வதே அதிகமாய் நடக்கிறது. துரோகி பட்டம்தான் நமக்கு வாரி வழங்குவதற்கு ஏகப்பட்ட கையிருப்பு உள்ளதே! உலகமயமாக்கல், இந்துத்துவ வன்முறைகள், தலித்துகளின் மீதான வன்கொடுமைகள், சமீபகாலமாய் பெண்களின் மீது அதிகரித்து வரும் கலாச்சாரப் பாசிஸ்ட்களின் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கெதிராகத் தொடர்ச்சியாகப் போராடி வருபவர்களே ஈழப்பிரச்சினை குறித்தும் விமர்சனபூர்வமான போராட்டங்களில் பற்றி உறுதியாய் நிற்கின்றனர். வைகோ மாதிரியான அரசியல் வியாபாரிகளும் திடீர் ஈழ ஆதரவாளர்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஈழமக்களைக் கைகழுவி விடும் நிலை கொண்டவர்களே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

..பாலா கருத்து:

//அருந்ததிராய் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்கிற ரேஞ்சில் என்றென்றும் அன்புடன் பாலா எழுதுவது
//
இவ்வளவு நாட்கள் வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு, இப்போது ஏதோ கட்டாயத்தால் ஈழத்தமிழர் ஆதரவாக களத்தில் குதித்துள்ள அருந்ததியை விமர்சிக்க (எப்படி சுகுணா திவாகருக்கு அருந்ததி சார்பாக ஜால்ரா அடிக்க உரிமை இருக்கிறதோ!) எனக்கும் பூரண உரிமை இருக்கிறதாகவே நினைக்கிறேன்.

மேலும், அருந்ததி ராயை ஸ்ரீலங்கா சென்று போராடவா சொல்கிறேன்!!! இத்தனை நாட்கள் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு இப்போது கூவ வேண்டிய அவசியம் என்ன என்று கேட்பதில் என்ன தவறு ? அதுவும், ரோசா வசந்த் தனது கமெண்ட்டில் "I heard (though I am not sure) when the Tamil literary writers approached Arundhati to make a statement on Srilankan issue, she refused saying `please don't disturb'." -- இப்படி சொல்லியிருந்ததும், நான் கேள்வி கேட்டதற்கு ஒரு காரணம்!

//அருந்ததிராய் முன்வைத்துப் போராடிய எத்தனை மக்கள் பிரச்சினைகளை பாலா ஆதரித்திருக்கிறார்?
//
நான் எதைப் பற்றி எப்போது பேச வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கிறேன். தொழில், குடும்பம் என்ற காரணங்களும் இருக்கிறது. அது சரி, சுகுணா அனைத்துப் பிரச்சினைகளிலும் தன் தரப்பு பற்றி எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ? சமீபத்தில் எக்மோரில் ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்பில், பெண்கள் மீது நிகழ்ந்த வன்முறையை கண்டித்து நான் எழுதியிருந்தேன். சுகுணா ஏன் அது பற்றி எழுதவில்லை என்று முட்டாள்தனமாக கேட்க முடியுமா? பலவற்றை வாசிக்கிறோம், பார்க்கிறோம், முடிந்தபோது எழுதுகிறோம், அஷ்டே.

//சனாதனப் பார்வையையே தன் எழுத்துக்களின் அடிப்படையாய்க் கொன்டுள்ள பாலா போன்றவர்கள்
//
அது என்ன எழவு சனாதனப் பார்வை என்று விளக்கினால் தன்யனாவேன். கிருமி லேயருக்கு எதிராக எழுதியதை சனாதனப் பார்வை என்று சொன்னால், பேச எதுவுமில்லை. எனக்குத் தெரிந்த சனாதன தர்மம்
"பிரக்ஞானம் பிரம்மா , அஹம் பிரம்மாஸ்மி , தத்வம் அஸி , அயம் ஆத்மா" !!!

//வைகோ மாதிரியான அரசியல் வியாபாரிகளும் திடீர் ஈழ ஆதரவாளர்களும்
//
ஈழத்தமிழர் அவலம் பற்றி பேசும்போது கூட எப்படி அரசியல் பல்லிளிக்கிறது பாருங்கள்! வைகோ அரசியல் வியாபாரியாம், ஆனால் சுகுணாவுக்குப் பிடித்த அரசியல்வாதியை / கட்சியை விமர்சித்து ஒரு வார்த்தை கிடையாது, கொடுமைடா சாமி :(

//அருந்ததிராயின் வகிபாத்திரத்தை ஊத்தி மூடப்பார்ப்பதில் "நாம்" கவனமாக இருக்க வேண்டும்.
ஈழமக்களைக் கைகழுவி விடும் நிலை கொண்டவர்களே என்பதையும் "நாம்" புரிந்துகொள்ள வேண்டும்.
//
"நாம்" என்று சொல்லும் தொனியில் உள்ள கர்வத்தை கவனிக்கவும்! அதாவது "ஈழமக்களுக்கு ஆதரவு அளிப்பதில் "நாம்" தனித்துவமானவர்கள். தனது ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து எந்த நேரமும் மிக எளிதில் பல்டி அடித்து விடக்கூடிய ..பாலா போன்ற "திடீர்" ஆதரவாளர்களிடம் "நம்மை"ப் போன்ற "அக்மார்க்" ஆதரவாளர்கள் மிக உஷாராக இருக்க வேண்டும்!" என்பதை எவ்வளவு நேர்த்தியா எடுத்துச் சொல்கிறார், பாருங்கள்!

பெரியார் பாசறையிலிருந்து வந்ததாலும், கம்யூனிச சித்தாந்தத்தில் ஊறியதாலும், தனக்கும் (தன் நண்பர்களுக்கும்!!) மட்டுமே நலிந்தோரைப் (ஈழத்தில் அல்லலுறும் தமிழர் என்று வாசிக்கவும்!) பற்றிப் பேச தகுதியும் அருகதையும் இருப்பதாக ஒருவர் எண்ணினால் அவரைப் பார்த்து பரிதாபப்படுவதை விடுத்து வேறென்ன செய்ய ? இப்படிப்பட்ட அங்கீகாரம் (யார் இதை வழங்குகிறார்கள்? வழங்குபவரின் தகுதிகள் யாவை?) கிடைத்து விட்டதாக சுகுணா எப்படி எண்ணுகிறார்? இன்னொருவரின் ஈழத்தமிழர் ஆதரவை கொச்சைப்படுத்தி, தனக்கு அங்கீகாரம் தேடும் அவலம் குறித்து என்னத்தைச் சொல்ல ?

மேலும் சில பாயிண்டுகள்:

"This is to certify that anbudan BALA is a bonafide supporter of Ealam Tamils" என்று சுகுணா திவாகர் கையெழுத்திட்ட நற்சான்றிதழ் இருந்தால் மட்டுமே, நான் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து எழுதும் தகுதி பெறுகிறேனா ? இல்லையெனில் நான் போலியா ? .கொ..சு :-(

ஈழத்தமிழர் பால் எனது அக்கறை உண்மையா/போலியா என்பதை, இணையத்தில் நான் எழுதியுள்ளதை வைத்து, வாசிப்பவர்கள் தீர்மானிக்கட்டும். ஒரு பிரச்சினையுமில்லை! இது போல தன்னிலை விளக்கம் தருவது சற்று கேவலமாக இருந்தாலும், இதன் மூலன் சுகுணா திவாகருக்கு ஏதாவது புரியும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், சுகுணாவைத் தவிர, என் வலைப்பதிவை வாசிக்கும் இன்னும் சிலருக்காக (கவனிக்கவும், "பலர்" என்று கூறவில்லை!) இந்த விளக்கத்தை எழுத வேண்டியுள்ளது!

சென்னையில் நடந்த அமைதிப் பேரணி

எ.அ.பாலா

Monday, March 30, 2009

535. ஈழத்தமிழருக்காக கண்ணீர் விடும் அருந்ததி ராய்

இது வரை, ஒரு கடுங்குளிர்காலத்து பனிக்கரடி போல, கும்பகர்ணன் போல, ஆழ்ந்த யோக நித்திரையில் இருந்த, உலகின் நெம்பர் 1 லிபரலும், நெம்பர் 1 மனிதநேயவாதியும் ஆன நமது அருந்ததி ராய், திடீரென்று "அருந்ததீ" ராயாக உருவெடுத்து, மிச்சம் மீதியிருக்கும் ஈழத்தமிழருக்காக பொங்கியெழுந்து தன் வேதனையைக் கொட்டி ஒரு கண்ணீர் காவியம் படைத்திருக்கிறார், இன்றைய "டைம்ஸ்ஆஃப் இண்டியா" நாளிதழில் !!!

ஈழத்தமிழர் அனுபவிக்கும் சொல்லவொண்ணாத் துயரங்களையும், பெரிய அளவிலான உயிரிழப்பையும் பற்றி அருந்ததி எழுதியிருப்பது கண்டு, மனது பதைபதைத்து போய் விட்டது! "தீவிரவாத"ப்புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை ராணுவம் ஏராளமான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பது பற்றி அருந்ததி கட்டுரை வாயிலாக அறிந்து கொண்டபோது, மேலும் வாசிக்க முடியாமல் கண்களில் நீர் திரையிட்டது!!

நீங்களும் அந்தக் கட்டுரையை தயவு செய்து ......................................................................................
...................................................................................
...............................................................................
வாசிக்க வேண்டாம்...


அடச்சே, வந்துட்டாங்க பதினாறாம் நாள் சடங்கு செய்வதற்கு :-(
************************************************

அருந்ததி ராய் மீது மதிப்பு வைத்திருக்கும் ரோசா வசந்த்தே அவர் மேல் பயங்கரக் கடுப்பில் இருப்பது அந்த டைம்ஸ் கட்டுரையில் ரோசா இட்ட பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது!! கட்டுரையின் முடிவில், ரோசாவின் கமெண்ட்டைப் பார்க்கலாம்...

--- ..பாலா
*********************************************

The silent horror of the war in Sri Lanka
--- Arundhati Roy


The horror that is unfolding in Sri Lanka becomes possible because of the silence that surrounds it. There is almost no reporting in the mainstream Indian media — or indeed in the international press — about what is happening there. Why this should be so is a matter of serious concern.

From the little information that is filtering through it looks as though the Sri Lankan government is using the propaganda of the ‘war on terror’ as a fig leaf to dismantle any semblance of democracy in the country, and commit unspeakable crimes against the Tamil people. Working on the principle that every Tamil is a terrorist unless he or she can prove otherwise, civilian areas, hospitals and shelters are being bombed and turned into a war zone. Reliable estimates put the number of civilians trapped at over 200,000. The Sri Lankan Army is advancing, armed with tanks and aircraft.

Meanwhile, there are official reports that several ‘‘welfare villages’’ have been established to house displaced Tamils in Vavuniya and Mannar districts. According to a report in The Daily Telegraph (Feb 14, 2009), these villages ‘‘will be compulsory holding centres for all civilians fleeing the fighting’’. Is this a euphemism for concentration camps? The former foreign minister of Sri Lanka, Mangala Samaraveera, told The Daily Telegraph:
‘‘A few months ago the government started registering all Tamils in Colombo on the grounds that they could be a security threat, but this could be exploited for other purposes like the Nazis in the 1930s. They’re basically going to label the whole civilian Tamil population as potential terrorists.’’

Given its stated objective of ‘‘wiping out’’ the LTTE, this malevolent collapse of civilians and ‘‘terrorists’’ does seem to signal that the government of Sri Lanka is on the verge of committing what could end up being genocide. According to a UN estimate several thousand people have already been killed. Thousands more are critically wounded. The few eyewitness reports that have come out are descriptions of a nightmare from hell. What we are witnessing, or should we say, what is happening in Sri Lanka and is being so effectively hidden from public scrutiny, is a brazen, openly racist war. The impunity with which the Sri Lankan government is being able to commit these crimes actually unveils the deeply ingrained racist prejudice, which is precisely what led to the marginalization and alienation of the Tamils of Sri Lanka in the first place. That racism has a long history, of social ostracisation, economic blockades, pogroms and torture. The brutal nature of the decades-long civil war, which started as a peaceful, non-violent protest, has its roots in this.

Why the silence? In another interview Mangala Samaraveera says, ‘‘A free media is virtually non-existent in Sri Lanka today.’’

Samaraveera goes on to talk about death squads and ‘white van abductions’, which have made society ‘‘freeze with fear’’. Voices of dissent, including those of several journalists, have been abducted and assassinated. The International Federation of Journalists accuses the government of Sri Lanka of using a combination of anti-terrorism laws, disappearances and assassinations to silence journalists.

There are disturbing but unconfirmed reports that the Indian government is lending material and logistical support to the Sri Lankan government in these crimes against humanity. If this is true, it is outrageous. What of the governments of other countries? Pakistan? China? What are they doing to help, or harm the situation?

In Tamil Nadu the war in Sri Lanka has fuelled passions that have led to more than 10 people immolating themselves. The public anger and anguish, much of it genuine, some of it obviously cynical political manipulation, has become an election issue.

It is extraordinary that this concern has not travelled to the rest of India. Why is there silence here? There are no ‘white van abductions’ — at least not on this issue. Given the scale of what is happening in Sri Lanka, the silence is inexcusable. More so because of the Indian government’s long history of irresponsible dabbling in the conflict, first taking one side and then the other. Several of us including myself, who should have spoken out much earlier, have not done so, simply because of a lack of information about the war. So while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than 200,000 face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country.

It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late.
(It is already too late, Ms.Arundhati Roy. Anyway, Thanks for your generosity and Kindness !!!)
*********************************

அருந்ததியின் கட்டுரைக்கு ரோசா வசந்த்தின் பின்னூட்டம்:

Rosavasanth,Chennai,says:I am not able to complete reading this article yet, due to mixed emotions. Even if one is a refugee, one has to be lucky enough to be a Palestine refugee, thanks to the racial prejudice of Roy kind of writers also. What is happening in Srilanka is one of worst human tragedy in this century, worst form of state terrorism which is completely unreported. On the other hand the propaganda of the Srilankan govt is so powerful that even Chomsky is manipulated in his recent interview. So Srilankan Tamils are worser than any victims of war in the world, begging for some body to start talking for them, from the non tamil diaspora. So tamils are in a vulgar position to welcome this article of Arundhati which is filled with dishonesty. I am sure this article will be republished in blogs and other forums. If Arundhati is honest, she should be first apologizing to all Srilanka tamil people, for not writing about this, for not even knowing about it, for holding a racial prejudice about some thing which is happening few hundred kms away from her. She has to accept the hippocrasy of writing about Gaza, when she refused to talk about some thing worse than Gaza. I heard (though I am not sure) when the Tamil literary writers approached Arundhati to make a statement on Srilankan issue, she refused saying `please don't disturb'. Having gone through the torture of knowing what is happening in eelam, and living with anger and frustration of the silence from Roy kind of writers for the last few months, I am not able to welcome this article.

***************************

Monday, February 23, 2009

528. ஈழததமிழர் ஆதரவாக சென்னையில் நடந்த அமைதிப்பேரணி

நேற்று இனஒழிப்புக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பு (இலங்கை அரசின் இன ஒழிப்பை எதிர்த்து)ஏற்பாடு செய்திருந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டேன். பெரிய அளவில் கூட்டம் இல்லை என்றாலும், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. சில புகைப்படங்கள் எடுத்தேன். 2 சிறு ஓட்டப் படங்களும் (வீடியோ) எடுத்தேன்.



ஃபாதர் ஜெகத் காஸ்பர் முன்னின்று நடத்திய பேரணி இது. War Memorial இல் தொடங்கிய நடைப்பேரணி ஓமந்தூரார் அரசினர் மாளிகையில் நிறைவடைந்தது. ஜெகத் காஸ்பர் சிறு உரை நிகழ்த்தினார். 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கலாம்.



முல்லைத்தீவு பகுதியில் 220000 தமிழர்கள் அவல நிலையில் தவிக்கையில், இலங்கை அரசு அங்கு 70000 பேர் இருப்பதாக பொய்ச் செய்தியை பரப்பி வருகிறது. வரும் வாரங்களில், போர் என்ற பெயரில், தமிழர்களை அழிப்பதற்கான சதியோ என்று அஞ்சுவதற்கு முகாந்திரம் இருக்கிறது. எப்படியாயினும், போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். புலிகளும், இலங்கை அரசும் பேச்சு வார்த்தை நடத்தியே ஆக வேண்டும், அப்பாவி தமிழர்களின் நல வாழ்வுக்காக. புலிகள், தாங்கள் தயார் என்று கூறியதாக ஒரு செய்தி இன்று பார்த்தேன்.




எந்த சாதி/மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், விடுதலைப்புலி ஆதரவு/எதிர்ப்பு நிலை எடுத்தவராக இருப்பினும், தனி ஈழத்தில் நம்பிக்கை வைத்திருந்தாலும் / இல்லாவிட்டாலும், இந்த சமயத்தில் பேராபத்தில் சிக்கியிருக்கும் , மிக்க அவல நிலையில் உழன்று கொண்டிருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக, கொடுங்கோல் சிங்கள அரசுக்கு எதிராக, மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டும்!

..பாலா

Friday, February 20, 2009

527. திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு!

ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, விகடனில் வந்துள்ள கட்டுரை இது. விகடனுக்கு நன்றி. இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து யாராவது வெளியிட வேண்டும். சிங்கள அரசின் அராஜகம், இன்னும் பலருக்கும் தெரிய வரும்!
எ.அ.பாலா
**********************************************

மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்!

மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில்,குறித்த இடத்தில் சந்திப்பேன்' என்றது. அதிலிருந்து தப்பிக்க,புத்திசாலிகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கேட்டான். 'இவர்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மரணம் வந்துவிடும்.

எனவே, உன்னிடம் வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடு' என்று ஒரு கிழவன் ரகசியமாகச் சொன்னதும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

18 மணி நேரம் ஓடியது குதிரை. 'அப்பாடா... இந்த இடத்துக்கு மரணத்தால் வர முடியாது' என்று மன்னன் பெருமூச்சுவிட்டுக் கீழே இறங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். தோளில் ஒரு கை விழுந்தது. 'சபாஷ்! இந்த இடத்துக்கு நீ நிச்சயம் வருவாய் என்றுதான் காத்திருக்கிறேன்' என்று பாசக் கயிற்றை வீசியதாம் மரணம்.

அந்த எமன் வீசியது பாசக் கயிறு. சிங்கள எமகாதகர்கள் வீசுவதற்குப் பெயர் பாதுகாப்பு வளையம். 'உயிருக்குப் பயந்தவர்கள் இங்கே வாருங்கள்' என்று அழைத்து, குண்டுபோட்டுக் கொல்கிறார்கள். அது பாதுகாப்பான மயானங்கள்!

எத்தனை தடவைதான் ஈழத்தின் சோகத்துக்கும் கொடூரத்துக்கும் வேறு வேறான வார்த்தைகளைத் தேட! வார்த்தைகள் தீர்ந்தாலும் வதைகள் தொடர்கின்றன. கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை அது தொடர்ந்து தொலைக்கத்தான் செய்யும்!

இப்போது ராணுவத்தின் இலக்கு புலிகள் அல்ல, அப்பாவித் தமிழர்கள். 'புலிகளை ஒழித்துவிட்டால், அடுத்து தமிழர்களுக்கு எதையாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மொத்தமாக முடித்துவிட்டு, புலிகள் பக்கம் திரும்ப சிங்கள அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. 'அப்பாவிகளைக் கொல்லாதே!' என்று பல்வேறு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்ததும், அதை மறைப்பதற்கான தந்திரத்தை மகிந்தா அரசு யோசித்தது. அவர்கள் கண்டுபிடித்தது 'பாதுகாப்பு வளையம்' என்ற வார்த்தை.

பொதுவாக போர்கள் நடக்கும்போது, மருத்துவமனைகள், மத வழிபாட்டு இடங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் 'பாதுகாப்பான இடங்கள்' என அறிவிக்கப்படும். அங்கு குண்டுகள் வீசக் கூடாது என்பது உலக நீதி. ஆனால், எல்லா அநீதிகளையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைப் 'பாது காப்பு வளையம்' என்கிறது.

'சில பகுதிகளைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளோம். அங்கு பொதுமக்கள் வந்துவிட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கெடு' என்று சிங்கள அரசு அறிவித்தது. அதாவது, மக்களை காட்டை விட்டு வெளியில் வரச் சொல்லி, கெடு விதித்தது. இதைத்தான் இங்குள்ள காங்கிரஸ் கட்சி, 48 மணி நேரப் போர் நிறுத்தம் என்று சொல்லிப் பெருமைப்பட்டது. இப்படி ஒரு தகவல் அறிவிக்கப்பட்டதுமே அப்போது கொழும்பில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர், 'தமிழர் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் என இலங்கையில் ஓர் அங்குலம்கூட இல்லையே? எங்கு வரச் சொல்கிறார்கள்?' என்று கிண்டலடித்தார்.

காட்டுக்குள் பல மாதங்களாக அடைந்துகிடக்கும் அப்பாவி மக்களில் சிலர், அரசாங்கத்தின் வார்த்தையை நம்பி, அந்தப் பாதுகாப்பான இடத்துக்கு வர, அங்கு போய் குண்டு போட்டுக் கதையை முடிக்கிறது சிங்கள அரசு.

இங்கு மக்கள் படும் சிரமங்கள் ஜெயவர்த்தனே காலத்தைவிடப் பல மடங்கு மோசமானது. ''எங்கள் மக்கள் முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக்குள் மட்டும் இரண்டரை லட்சம் பேர் இருக்கிறார்கள். யாருக்கும் வீடு கிடையாது. குடிசை கிடையாது. வெறும் சாக்கு, பிளாஸ்டிக் பாய்களை வைத்து மரங்களுக்கு மத்தியில் இருக்கும் அகலத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள்.

பெரும்பாலான நேரம் பதுங்கு குழிகளில்தான் எல்லாரும் இருக்கிறார்கள். காலைக் கடன்கள் கழிப்பது, சமையல் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் பதுங்கு குழியில்தான். இரவு பகலாக குழிக்குள் உட்கார்ந்திருக்கும் அவஸ்தையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. விமானம் வரும் சத்தம்
கேட்டால், அத்தனை பேரும் பூமிக்குக் கீழே புதைந்து கிடப்பார்கள். குண்டு விழுந்தால் அப்படியே சமாதி!''

முல்லைத் தீவு மாவட்டம், தேவிபுரம், வள்ளிபுனத்திலிருந்து இடம்பெயர்ந்து அதிகாலையில் மூன்று குடும்பங்கள் வந்து சேர்ந்தன. ஐந்து மணி இருக்கும். அந்த நேரம் பார்த்து அவர்கள் மீது குண்டுகள் விழுந்தன. 19 பேர் அந்த இடத்தில் செத்துப்போனார்கள். 61 பேர் பலத்த காயமடைந்து துள்ளத் துடிக்கக்
கிடந்தனர். காயம் அடைந்தவர்களை முல்லைத் தீவு மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். மதியம் ஒரு மணிக்கு அங்கும் விழுந்தது குண்டு. காயம்பட்டு வந்தவர்கள், அங்கேயே பிணமானார்கள். இது நடந்தது கடந்த 12-ம் தேதி.

அதற்கு முந்தைய நாள் தேவிகுளம் நோக்கி நள்ளிரவு 3.15 மணிக்கு நடந்து வந்துகொண்டு இருந்த 22 பேர் குண்டுவீச்சில் செத்தார்கள். இடம்பெயர்ந்து வருபவர்கள் தாற்காலிகமாகத் தங்கியிருக்கும் கொட்டகைகள் மீதும் குண்டுகள் விழுகின்றன. காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை மீது கடந்த 6-ம் தேதி விழுந்த குண்டுவீச்சில் 61 பேர் இறந்துபோனார்கள். 'ஆஸ்பத்திரிக்குப் போனா, சாவுதான்' என்பது தமிழகத்தில் ஜோக். ஈழத்தில் அதுதான் கடைசி ஷாக்!

மருத்துவமனைகளுக்கும் எந்த மருந்தையும் கடந்த ஆறு மாதமாக வரவிடவில்லை. வந்தவை அனைத்தும் காலியாகி, வெறும் பேண்டேஜ்கள் மட்டும் வைத்து, வாசலில் பாய் விரித்துப் படுக்கவைத்துவிடுகிறார்கள். வலியால் துடிப்பவர்களைப் பார்த்து டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சி அடைவதில்லை. அவர்களிடம் வேறு வழியும் இல்லை. முல்லைத் தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களை அங்கிருந்து வெளியேற கொழும்புவில் இருந்து உத்தரவு. இனி சும்மா படுக்கவைத்து கட்டுப் போடக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். இப்படி எல்லா மருத்துவமனைகளும் அறிவிக்கப்படாத சுடுகாடுகளாக மாறிவிட்டன.

மிக அதிக பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கப்பல் மூலம் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டுபோக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சி எடுத்தது. முல்லைத் தீவு மாத்தளன் கடலில் இந்தக் கப்பலை ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்த கடற்படை அனுமதிக்கவில்லையாம். சுமார் 240 பேர் மட்டும் அவசர அவசரமாக கப்பலில் ஏற்றப்பட்டார்கள். மற்றவர்கள் நொந்துபோய் அங்குள்ள மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதோடு செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

இன்னொரு பக்கம் பார்த்தால்....

உயிருடன் பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர்கள் தனித் தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதில் முதியோர்கள், குழந்தைகள் வேறு பக்கமும் இளைஞர்கள், இளம் பெண்கள் தனியாகவும் அனுப்பப்படுகிறார்கள். சோறு, தண்ணீர் இல்லாத இடங்களில் முதியோர்கள் அவஸ்தைப்பட... இளைஞர்கள், இளம் பெண்களுக்கான சித்ரவதை இன்னொரு புறம் ஆரம்பமாகிறது.

விசாரிக்கப்போவதாக ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வருவார்கள். ''இளைஞர்களை முடிந்த வரை கொடுமைப்படுத்திவிட்டுச் சுட்டுவிடுவது இவர்களின் வேலை. வேறு எதுவும் விசாரணை செய்வதில்லை. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், கோரங்களின் உச்சம். இளம்பெண்களின் கண்களை முதலில் கட்டுவார்கள். கைகளைப் பின்புறம் சேர்த்துக் கட்டுவார்கள். அதன் பிறகு அவர்களின் ஆடைகளைக் கிழித்து அம்மணமாக்கிவிட்டு, உதைத்து ஓடவிடுகிறார்கள். எங்கு போகிறோம்... என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாமல், பயத்தில் ஒரு பெண் ஓட, வாய்ப்பான வசதியான இடங்களில் சிங்கள மிருகங்கள் தங்கள் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும். எத்தனையோ பேர் அவள் மீது விழுந்து புரண்ட பிறகு, அவள் உறுப்புகளைச் சிதைத்து சுட்டுக் கொன்றுவிடுவதுதான் அங்கு நடக்கிறது'' என்று சொல்லப்படும் தகவல்களைக் கேட்கவே நெஞ்சு நடுங்குகிறது.

அனுராதபுரம், பொலநறுவை மயானங்கள், அதை ஒட்டிய காட்டுப் பகுதிகள், வவுனியாவின் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில்தான் இந்தக் கொடூரக் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றனவாம். அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போன சிங்களத் தொழிலாளர்கள், தங்கள் பகுதிகளில் பல பெண்களின் பிணங்கள் நிர்வாணமாகக் கிடந்ததாக வெளியில் சொன்னார்கள். வன்னியில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாறிக்கொள்ள வவுனியாவுக்கு அடைக்கலம் புகும் மக்களைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் இப்போதைய ஈழமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

புலிகள் வசம் இருக்கும் புதுக் குடியிருப்பையும், அதைத் தாண்டிய முல்லைத் தீவையும் கைப்பற்றி ஏக இலங்கையை பிப்ரவரி முதல் நாள் விடுதலை செய்யப்போவதாக அறிவித்த மகிந்தா ராஜபக்ஷே அரசு, இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் அந்தச் செய்தியை அறிவிக்காமல் மக்களைக் கொல்வதில் அக்கறையுடன் இயங்கி வருகிறது. இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் என்று சிங்களக் கட்சிகள் சொல்ல ஆரம்பித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பு, 'தமிழர்கள் யாரையும் விடக் கூடாது' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குக் காத்திருந்தது மாதிரி, கோத்தபய ராஜபக்ஷே ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

''புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வர வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா, இல்லையா என்று நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. புலிகள் தங்கள் வசமிருந்த மக்கள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுத்துள்ளார்கள். எனவே, அனைவரும்
புலிகள்தான். ஒரு குடும்பத்தில் யாரோ ஒருவர் இறந்த மாவீரராகவோ அல்லது இப்போது அமைப்பில் இருக்கும் போராளியாகவோ உள்ளார்கள். எனவே, எந்தக் குடும்பமும் எங்களுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடியாது. மருத்துவமனைகளைத் தாக்குவதாகச் சொல்கிறார்கள். அதுவும் எங்களின் ராணுவ இலக்குதான்'' என்று தெளிவாக அறிவித்துவிட்டார் கோத்தபய ராஜபக்ஷே.

''இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நித்தமும் இந்த தாக்குதலைத் தொடர சிங்கள
தரப்பு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்புறம் மயானக் கரைக்கு வெள்ளையடித்து ரிப்பன் கட் பண்ணப்போகிறதா ஐ.நா.சபையும் உலக சமுதாயமும்?'' என்று ஈழ மக்கள் கதறுகிறார்கள்.

அது பற்றி நமக்கென்ன கவலை?

நமக்கு இலங்கையை கிரிக்கெட்டில் ஜெயித்தது போதும்தானே!.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails